Tuesday, February 17, 2009

சோகம் எனக்குப் பிடிக்கும்

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் , சோகமும் மாறி மாறி வரும் என்பர். ஆனால் சிலரது வாழ்வில் மகிழ்ச்சியின் விகிதாசாரம் அதிகமாகவும் சிலரது வாழ்வில் சோகத்தின் விகிதாசாரம் அதிகமாகவும் அமைந்து விடுவதுண்டு. சிலரது வாழ்வில் மகிழ்ச்சி வியாபாரத்தில் வரும் லாபத்தைப் போல சில சமயங்களில் வரும் , சில சமயங்களில் வராது. ஆனால் சோகம் என்பது பரம்பரைச் சொத்து போன்றது. அதிகம் பேர் அதை விற்க மாட்டார்கள். அப்படி விற்க முயன்றாலும் அதில் ஏதாவது வில்லங்கம் வந்து வேலையைக் கெடுக்கும். அப்படிப்பட்ட சோகம் என்பது பலருக்கு பிடிக்காது. ஆனால் எனக்கு சோகம் மிகவும் பிடிக்கும்.

சோகத்தின் வாய்ப்பட்ட மனிதன் அடையும் முதல் பயன் சிந்திக்க ஆரம்பிப்பது. சோகமான மனிதன் நிறைய சிந்திப்பான். இந்த சோகம் நம்மை ஏன் வந்து சேர்ந்தது என்பதில் ஆரம்பித்து கடந்த காலத்தில் அவன் அனுபவித்த நல்லவை , கெட்டவை அதனால் அவன் இன்று இருக்கும் நிலைமை , எதிர்காலத்தில் இதே நிலைமை நீடிக்குமா அல்லது அதில் ஏதாவது மாற்றங்கள் வருமா என்பன போன்ற பல விஷயங்கள் அவன் மனதில் புயல் காற்றில் வரும் அலைபோல வந்து மோதும்.

அப்படி சிந்திக்கக்கூடிய ஒரு மனிதனின் நினைவுகளும், நடவடிக்கைகளும் எப்பொழதும் முன்னேற்ற பாதையை நோக்கியே இருக்கும். பின்னடைவைப் ப்ற்றி யோசிக்கவும் மாட்டான். ஆக சோகம் அவன் வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டு இருந்தாலும் சோகத்தை விரட்டி விட்டு மகிழ்ச்சியை வீட்டிற்குள் எப்படி அழைத்து வருவது என்பதிலேயே அவன் நினைவு இருக்கும். மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமென்றால் மலையைப் புரட்ட முயற்சியும் செய்வான். சிந்தித்தல் , வழியைத் தெரிந்து கொள்ளுதல் , முயற்சித்தல் ஆகியவை இருந்தால் உடனடியாக இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவனுக்கு மகிழ்ச்சி கிடைக்குமல்லவா?

இதைப் படிக்கும் நீங்கள் சோகமடைய வேண்டாம். எல்லோரும் என்றென்றும் மகிழ்ச்சியுடனே இருங்கள்.

ஏனென்றால் சோகம் எனக்கு மட்டுமே பிடிக்கும்.

Tuesday, December 30, 2008

விளம்பர வில்லன்கள்

இன்றைய உலகில் மண்ணை விற்க வேண்டுமானாலும் சரி , பொன்னை விற்க வேண்டுமானாலும் சரி. விளம்பரம் என்பது மிக மிக அவசியமாகப் போய் விட்டது. அப்படி வரும் விளம்பரங்களில் சம்பந்தமே இல்லாமல் பெண்களை காட்டுவதும் அளவிற்கு அதிகமாக பொருளின் தரத்தையும் , கம்பெனியின் உழைப்பையும் உயர்த்திக் காட்டுவதும் வழக்கமாகி விட்டது. மக்களை திசை திருப்பவும் , ஏமாற்றவும் பல உத்திகளை கையாள்கின்றனர். உதாரணத்திற்கு நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் இதோ சில.

{1} மனிதனின் தோல் நிறத்தை நிரந்தரமாக மாற்ற முடியாது என்று தெரிந்தும் கருப்பை சிவப்பாக்குகிறோம் என்று க்ரீம்களும் , லோஷன்களும் விற்கப்படுகின்றன. இதில் சில கம்பெனிகள் கியாரண்டி வேறு கொடுக்கின்றன.

{2} சில கம்பெனிகள் தங்களது பொருட்களில் ஒன்றை வாங்கினால் ஒன்று இலவசம் என்கின்றன.அப்படி ஒன்றுக்கு ஒன்று இலவசமாக விற்கும் பொருட்களில் தரம் இருப்பதில்லை , அல்லது விலை அதிகமாக இருக்கின்றது.

{3} சில கம்பெனிகள் தங்களது பொருட்களை முன்பை விட" அதிக சக்தியுடன் "என்று சொல்லி விளம்பரம் செய்கின்றன.முன்பைவிட தற்சமயம் அதிக சக்தி என்றால் அதற்கு முன்பு சக்தி குறைந்த , தரம் குறைந்த பொருட்களை விற்று வந்ததாகத் தானே அர்த்தம்.

{4} ஒரு கம்பெனி தனது வாஷிங் பவுடரில் உப்பு நீரை நல்ல தண்ணீராக மாற்றக் கூடிய சக்தி இருக்கிறது என்று விளம்பரம் செய்கிறது. ஒரு அரசாங்கம் கடல் நீரை குடி நீராக மாற்ற கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கிறது. இங்கே சில்லறையை விட்டெறிந்தால் உப்பு தண்ணீர் நல்ல தண்ணீராக மாறி விடும் போல் தெரிகிறது.

{5} சில கம்பெனிகள் அவர்களது வாசனை பொருட்களை தடவிக் கொண்டால் வேலை கிடைக்கும் , பெண்கள் பின்னால் ஓடி வருவார்கள் , ப்ரமோஷன் கிடைக்கும் என்பது போல விளம்பரங்களை சித்தரித்து ஏமாற்றுகின்றனர்.

இப்படி பொருட்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக விளம்பரத்தில் பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்களையும் , விளையாட்டு வீரர்களையும் இதில் ஈடுபடுத்துவது கொடுமையின் சிகரமாகும்.

இப்படிப்பட்ட விளம்பர வில்லன்களிடம் ஏமாந்து போகாமல் ஜாக்கிரதையாக இருங்கள். இல்லையென்றால் நீங்கள் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை இந்த விளம்பர வில்லன்கள் கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவார்கள். உஷார்..................உஷார்........

Monday, December 15, 2008

மரம் வளர்க்க ஒரு அதிரடி நடவடிக்கை

மழை குறைந்து தண்ணீருக்காக மனித இனம் ஏங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இதைப் பற்றி கவலையில்லாமல் அலட்சியப் போக்குடன் இருப்பவர்களை பார்த்து ஒவ்வொரு குழந்தை பிறப்பின் பொழுதும் ஒரு மரம் நடுவோம் என்று கொஞ்சவும் வேண்டாம்.

பின்னர் அதன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு மரம் நடுவோம் என்று கெஞ்சவும் வேண்டாம்.

அதிரடியாக நாட்டைக் காடாக மாற்றுவோம் என்று உலகமெங்கும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் ஓஸோனில் உள்ள ஓட்டையை அடைக்க முடியும்.
உருகி வரும் பனிமலைகளை உருகாமல் தடுக்க முடியும்.

இல்லையென்றால் இன்று ஓட்டை விழுந்திருக்கும் ஓஸோன் படலம் கிழிந்து விடும். அதைத் தடுக்க இந்த மனித குலத்தால் முடியவே முடியாது.

ஏனென்றால் உருகும் பனிமலையின் தண்ணீர் வெள்ளத்தில் மனித குலம் மூழ்க வேண்டியது தான்.

Thursday, September 4, 2008

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் ரிஸப்ஷனில் ஒரே மாதிரி

சேலை உடுத்தி , முகத்தில் செயற்கை புன்னகையுடன் , ஒரே வயது

உள்ள அழகு பெண்கள் நான்கைந்து பேர் சப்தம் வராமல் வாயை

மட்டும் அசைத்து ஜல்லியடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த

கணேஷும் வஸந்த்தும் விழா நடக்க இருக்கும் ஹாலுக்கு போகும்

பாதையை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு நகர்ந்தனர். நடந்து

கொண்டே , வஸந்த் கணேஷிடம் " பாஸ் ரைட்டுல இருந்து

ரெண்டாவதாக ஒரு பொண்ணு நின்னுக்கிட்டு இருந்துச்சே , செம

கட்டை பாஸ். சும்மா நின்னு விளையாடும் போல தெரியுது"

என்றான். அதற்கு கணேஷ் , "உன் வேலையைகாட்டஆரம்பிச்சிட்டியா,

பேசாம வா "என்று சொல்லி ஹாலுக்குள் நுழைந்து முதல்

வரிசையில் லெஃப்ட் ஸைடில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்து

கொண்டனர்.


சிறிது நேரம் கழித்து அதே ரிஸப்ஷனில் பரத்தும் ,சுசீலாவும்

வந்து விழா நடக்கும் ஹாலுக்கு போக வழி கேட்டனர். பரத் அந்த

ரிஸப்ஷனிஸ்ட்களை ஜல்லிக்கட்டு காளையின் பெருமூச்சுடன்

பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த சுசீலா கையில் இருந்த

கர்சீப்பை பரத்திடம் நீட்டி " வழியுது துடைச்சிக்கங்க " என்று சொல்லி

அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.


பின்னாலேயே இன்ஸ்பெக்டர் கோகுல் நாத்துடன்

விவேக்கும் , ரூபலாவும் உள்ளே நுழைந்தனர். கோகுல் நாத் இந்த

ஓட்டலின் விழா நடக்கும் ஹாலில் ஏற்கனவே சில விழாக்களுக்கு

வந்து சென்றிருப்பதால் நேராக ஹால் இருக்கும் திசையை நோக்கி

நடந்தார். ரூபல ரிஸப்ஷனில் நிற்கும் பெண்களின் நகை, மற்றும்

உடை அலங்காரத்தை கவனித்துக் கொண்டே வருவதை விவேக் தன்

ஓரக் கண்ணால் கவனித்தான்.

சில நிமிடங்களுக்கு பிறகு நீல நிற ஜீன்ஸ் மற்றும்

வெளிர் நீல நிற டி-ஷர்ட்டும் அணிந்த நரேந்திரனும் , உடம்பை

சிக்கென்று கவ்விய புடவையுடன் வைஜெயந்தியும் உள்ளே

நுழைந்தனர். நரேந்திரன் நேராக ரிஸப்ஷனுக்கு சென்று ஹால் எந்த

மாடியில் இருக்கிறது என்று கேட்க அதில் ஒரு ரிஸப்ஷனி

எய்த் ஃப்ளோர் என்றாள். அதற்கு நரேந்திரன் அவளிடம் " நாங்க இந்த

ஓட்டலுக்கு புதுசு. ப்ளீஸ் , நீங்க கூட வந்து கொஞ்சம் காமிங்களேன் "

என்றான். வைஜெயந்தி தனது முழங்கையால் அவன் விலாவில்

ஓங்கி ஒரு இடி இடித்து விட்டு , ரிஸப்ஷனிஸ்டை பார்த்து

" நோ தாங்க்ஸ். நாங்களே போயிருவோம் " என்று நரேந்திரனை

நெட்டித் தள்ளிக் கொண்டு வந்து " நீ அவகிட்ட வழிந்த வழிசலுக்கு ,

உனக்கு ஒரு வாரத்திற்கு ஒண்ணும் கிடையாது." என்றாள்.

அனைவரும் விழா நடக்கும் ஹாலில் முன்

வரிசையில் அமர்ந்திருந்தனர். விழாவின் நாயகனான ஈகிள்ஸ் ஐ

துப்பறியும் நிறுவனத்தின் தாஸுக்கு லைஃப் டைம் அச்சீவ்மெண்ட்

அவார்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கார் ரிப்பேராகி டாக்ஸி

கிடைக்காமல் லேட்டாக வந்து சேர்ந்த எழுத்தாளர் ராஜேந்திர குமார்

உட்கார காலி இருக்கை இல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்து

" ஞே " என்று விழித்துக் கொண்டிருந்தார்.

பின் குறிப்பு : எனது இளம் பிராயத்தில் நான் படித்து ரசித்த

எழுத்தாளர்களை இதன் மூலமாக நினைவு கூர்ந்திருக்கிறேன். அந்த

எழுத்தாளர்கள் முதல் பாராவிலிருந்து முறையே

சுஜாதா , பட்டுக்கோட்டை பிரபாகர் , ராஜேஷ்குமார் , சுபா மற்றும்

ராஜேந்திர குமார் ஆகியோர் தான் என்று சொல்லவும் வேண்டுமோ.

Saturday, August 2, 2008

எங்கே போயிற்று இந்தியனின் தேசப்பற்று

தேசப்பற்று என்பது யாரும் ஊட்டி வளர்ப்பதாலோ யாரையும் பார்த்து தெரிந்து கொள்வதாலோ வருவதல்ல . தாயின் கருவில் இருக்கும் பொழுதே இரத்தத்துடன் ஊறி வர வேண்டியதாகும்.

அந்தக் காலத்தில் மகாத்மா காந்தியை ஒரு தேசப்பற்று மிகுந்த சுதந்திர போராட்ட தியாகி என்று கேள்விப்பட்டு அவரை நேரில் பார்த்திராத , அவரது பேச்சை மட்டும் கேட்டு , அவர் செய்தித்தாள்களில் எழுதியவற்றை படித்தும் மட்டும் லட்சோப லட்சம் இந்தியர்கள் மொழி , இனம் , மதம் ஆகியவற்றை தாண்டி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இன்றோ தினம் தினம் காலையில் இருந்து இரவு வரை நாம் புழங்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை விளக்கொளியில் தூக்கிப் பிடித்து காந்தி இருக்கிறாரா இல்லையா என்று ஆயிரம் தடவையாவது பார்க்கிறோம். அப்படி இருந்தும் நம்மில் பலருக்கு தேசப்பற்று வர மறுக்கிறதே.

இன்னும் நாம் லஞ்சம் , ஊழல் , வரதட்சணை , தீண்டாமை என்று தேசத்திற்கும் , மனித நேயத்திற்கும் ஒவ்வாதவற்றை செய்து கொண்டிருக்கிறோமே.

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் தேசப்பற்று இரத்தத்தில் ஊறுவது எப்போது ?

Wednesday, June 25, 2008

வந்துட்டாய்ங்கய்யா.....வந்துட்டாய்ங்கய்யா......

எனது வாழ்க்கையில் வருடத்திற்கு மூன்று நான்கு முறை நெடுந்தூர ரயில் பயணம் (வடக்கிலிருந்து தெற்காகவும் , தெற்கிலிருந்து வடக்காகவும்) செய்யும் பாக்கியம் கிடைக்கும்.



அப்படி நெடுந்தூர ரயில் பயணத்தில் ஜன்னல் வழியாக இயற்கையின் அழகை ரசித்தபடியும் வாழ்வில் நடந்த இன்ப துன்ப நிகழ்வுகளை மனதில் அசை போட்டபடியும் யாருடனும் பேசாமல் தனிமையை ரசித்துக் கொண்டே பயணம் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும்.



சில நேரங்களில் பக்கத்து அல்லது எதிர் ஸீட்டில் அழையா விருந்தாளி யாராவது (வட இந்தியர்கள்) வந்து உட்கார்ந்து கொண்டு எனது தனிமை சுகத்திற்கு கேடு விளைவிக்கும்படியாக



சார் எந்த ஊர் வரைக்கும் போறீங்க?



இந்த ஊர்ல என்ன பண்றீங்க?



சொந்த ஊரே உங்களுக்கு இது தானா?



இந்த டிரைவர் என்ன வண்டியை இப்படி ஓட்றான்.

சிகப்புக் கலர்ல எதைப் பார்த்தாலும் வண்டியை நிறுத்திடுறான். எத்தனை மணி நேரம் லேட்டா போய்ச் சேருவனோ தெரியலையே?

நாட்டு நடப்பு ஒண்ணும் சரியில்லை சார். என்ன நான் சொல்றது என்று துறுப்பிடித்த பிளேடு போடுவார்கள்.



ஒரு முறை அப்படி என்னிடம் விடாப்பிடியாக பேசிக்கொண்டு வந்த வட இந்திய பயணி என் பெயரைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் உங்கள் பெயர் என்ன என்று கேட்டார்.

நானும் இனிமேல் அந்த நபர் என்னிடம் பேச முயற்ச்சிக்கவே கூடாது என்கிறவிதமாக என் பெயரை சொன்னால் உங்களால் திருப்பிக் கூட சொல்ல முடியாது மிகவும் கஷ்டமான உச்சரிப்பு கொண்ட பெயர் என்று சொல்லிவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.



அப்படியும் பிடிவாதமாக அந்த நபர் பரவாயில்லை சொல்லுங்கள் என்று நச்சரித்ததால் என் பெயர் வீர பாண்டிய கட்ட பொம்மன் என்றேன். அந்த வடக்கத்திய பயணிக்கு நான் என்ன சொன்னேன் என்றே புரியாததால் கண்களை அகல விரித்து இன்னொரு முறை சொல்லுங்க என்றார்.



நானும் இந்த முறை கொஞ்சம் வேகமான உச்சரிப்புடன் திருப்பிச் சொன்னேன். அந்த நபர் ஆமாம் உங்கள் பெயரை என்னால் உச்சரிக்கக் கூட முடியாது தான் என்றவர் அதன் பிறகு அவர் இறங்கும் வரை என்னுடன் பேச முயற்ச்சிக்கவில்லை



.நீங்களும் என்னைப் போன்ற தனிமை விரும்பும் ரயில் பயணி என்றல் சொல்லுங்கள். உங்களையும் வடக்கத்திய பிளேடுகளிடமிருந்து தப்பிக்க வைக்க என்னிடம் சில சிக்கலான பெயர்கள் கைவசம் இருக்கின்றன.



அவற்றில் சில... கலிய வரத பெருமாள். சுயம்புலிங்கத்தேவர். ஜெயங்கொண்ட செட்டியார். சொக்கலிங்க பாண்டி வீரபாகு.

Monday, June 2, 2008

எனக்குள் ஒருவன்

நகமும் சதையும் போல பல்லும் எனாமலும் போல
வண்டியும் சக்கரமும் போல என்னைப் பிரியாமல்
எனக்குள் ஒருவன் இருக்கிறான்.

நான் உண்மையை பேச நினைத்தால் அவன்
என்னை பொய் மட்டும் பேசச் சொல்கின்றான்.
நான் நல்லதையே பார்த்து நல்லதையே
செய்ய நினைத்தால் அவன் என்னை
கெட்டதைப் பார்த்து கெட்டதையே செய்யச் சொல்கின்றான்.
நான் நேர் வழியில் செல்ல இருக்கும் பொழுது
அவன் எனக்கு குறுக்கு வழியைக் காண்பிக்கின்றான்.
நான் ஒன்று நினைக்க அவன் அதற்கு
எதிர்மாறாகவே நினைக்கின்றான்.

தினமும் எந்த நேரமும் நான் அவனுடன்
போராட வேண்டி இருக்கிறது.
எந்தப் போராட்டத்திலும் அவனே ஜெயிக்கின்றான்.
அவனுடன் போராடி என்னால் ஜெயிக்க முடியவில்லை.

அதனால் தானோ என்னவோ நான் இன்னும்
ஒரு மிகச் சராசரி மனிதனாகவே இருக்கின்றேன்.

நான் ஒரு உத்தமனாக, லட்சியபுருஷனாக,
உயர்ந்த மனிதனாக மாற தினமும்
என் போராட்டம் தொடர்கிறது,
எனக்குள் இருக்கும் அவனுடன்.