Wednesday, June 25, 2008

வந்துட்டாய்ங்கய்யா.....வந்துட்டாய்ங்கய்யா......

எனது வாழ்க்கையில் வருடத்திற்கு மூன்று நான்கு முறை நெடுந்தூர ரயில் பயணம் (வடக்கிலிருந்து தெற்காகவும் , தெற்கிலிருந்து வடக்காகவும்) செய்யும் பாக்கியம் கிடைக்கும்.



அப்படி நெடுந்தூர ரயில் பயணத்தில் ஜன்னல் வழியாக இயற்கையின் அழகை ரசித்தபடியும் வாழ்வில் நடந்த இன்ப துன்ப நிகழ்வுகளை மனதில் அசை போட்டபடியும் யாருடனும் பேசாமல் தனிமையை ரசித்துக் கொண்டே பயணம் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும்.



சில நேரங்களில் பக்கத்து அல்லது எதிர் ஸீட்டில் அழையா விருந்தாளி யாராவது (வட இந்தியர்கள்) வந்து உட்கார்ந்து கொண்டு எனது தனிமை சுகத்திற்கு கேடு விளைவிக்கும்படியாக



சார் எந்த ஊர் வரைக்கும் போறீங்க?



இந்த ஊர்ல என்ன பண்றீங்க?



சொந்த ஊரே உங்களுக்கு இது தானா?



இந்த டிரைவர் என்ன வண்டியை இப்படி ஓட்றான்.

சிகப்புக் கலர்ல எதைப் பார்த்தாலும் வண்டியை நிறுத்திடுறான். எத்தனை மணி நேரம் லேட்டா போய்ச் சேருவனோ தெரியலையே?

நாட்டு நடப்பு ஒண்ணும் சரியில்லை சார். என்ன நான் சொல்றது என்று துறுப்பிடித்த பிளேடு போடுவார்கள்.



ஒரு முறை அப்படி என்னிடம் விடாப்பிடியாக பேசிக்கொண்டு வந்த வட இந்திய பயணி என் பெயரைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் உங்கள் பெயர் என்ன என்று கேட்டார்.

நானும் இனிமேல் அந்த நபர் என்னிடம் பேச முயற்ச்சிக்கவே கூடாது என்கிறவிதமாக என் பெயரை சொன்னால் உங்களால் திருப்பிக் கூட சொல்ல முடியாது மிகவும் கஷ்டமான உச்சரிப்பு கொண்ட பெயர் என்று சொல்லிவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.



அப்படியும் பிடிவாதமாக அந்த நபர் பரவாயில்லை சொல்லுங்கள் என்று நச்சரித்ததால் என் பெயர் வீர பாண்டிய கட்ட பொம்மன் என்றேன். அந்த வடக்கத்திய பயணிக்கு நான் என்ன சொன்னேன் என்றே புரியாததால் கண்களை அகல விரித்து இன்னொரு முறை சொல்லுங்க என்றார்.



நானும் இந்த முறை கொஞ்சம் வேகமான உச்சரிப்புடன் திருப்பிச் சொன்னேன். அந்த நபர் ஆமாம் உங்கள் பெயரை என்னால் உச்சரிக்கக் கூட முடியாது தான் என்றவர் அதன் பிறகு அவர் இறங்கும் வரை என்னுடன் பேச முயற்ச்சிக்கவில்லை



.நீங்களும் என்னைப் போன்ற தனிமை விரும்பும் ரயில் பயணி என்றல் சொல்லுங்கள். உங்களையும் வடக்கத்திய பிளேடுகளிடமிருந்து தப்பிக்க வைக்க என்னிடம் சில சிக்கலான பெயர்கள் கைவசம் இருக்கின்றன.



அவற்றில் சில... கலிய வரத பெருமாள். சுயம்புலிங்கத்தேவர். ஜெயங்கொண்ட செட்டியார். சொக்கலிங்க பாண்டி வீரபாகு.