Tuesday, February 17, 2009

சோகம் எனக்குப் பிடிக்கும்

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் , சோகமும் மாறி மாறி வரும் என்பர். ஆனால் சிலரது வாழ்வில் மகிழ்ச்சியின் விகிதாசாரம் அதிகமாகவும் சிலரது வாழ்வில் சோகத்தின் விகிதாசாரம் அதிகமாகவும் அமைந்து விடுவதுண்டு. சிலரது வாழ்வில் மகிழ்ச்சி வியாபாரத்தில் வரும் லாபத்தைப் போல சில சமயங்களில் வரும் , சில சமயங்களில் வராது. ஆனால் சோகம் என்பது பரம்பரைச் சொத்து போன்றது. அதிகம் பேர் அதை விற்க மாட்டார்கள். அப்படி விற்க முயன்றாலும் அதில் ஏதாவது வில்லங்கம் வந்து வேலையைக் கெடுக்கும். அப்படிப்பட்ட சோகம் என்பது பலருக்கு பிடிக்காது. ஆனால் எனக்கு சோகம் மிகவும் பிடிக்கும்.

சோகத்தின் வாய்ப்பட்ட மனிதன் அடையும் முதல் பயன் சிந்திக்க ஆரம்பிப்பது. சோகமான மனிதன் நிறைய சிந்திப்பான். இந்த சோகம் நம்மை ஏன் வந்து சேர்ந்தது என்பதில் ஆரம்பித்து கடந்த காலத்தில் அவன் அனுபவித்த நல்லவை , கெட்டவை அதனால் அவன் இன்று இருக்கும் நிலைமை , எதிர்காலத்தில் இதே நிலைமை நீடிக்குமா அல்லது அதில் ஏதாவது மாற்றங்கள் வருமா என்பன போன்ற பல விஷயங்கள் அவன் மனதில் புயல் காற்றில் வரும் அலைபோல வந்து மோதும்.

அப்படி சிந்திக்கக்கூடிய ஒரு மனிதனின் நினைவுகளும், நடவடிக்கைகளும் எப்பொழதும் முன்னேற்ற பாதையை நோக்கியே இருக்கும். பின்னடைவைப் ப்ற்றி யோசிக்கவும் மாட்டான். ஆக சோகம் அவன் வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டு இருந்தாலும் சோகத்தை விரட்டி விட்டு மகிழ்ச்சியை வீட்டிற்குள் எப்படி அழைத்து வருவது என்பதிலேயே அவன் நினைவு இருக்கும். மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமென்றால் மலையைப் புரட்ட முயற்சியும் செய்வான். சிந்தித்தல் , வழியைத் தெரிந்து கொள்ளுதல் , முயற்சித்தல் ஆகியவை இருந்தால் உடனடியாக இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவனுக்கு மகிழ்ச்சி கிடைக்குமல்லவா?

இதைப் படிக்கும் நீங்கள் சோகமடைய வேண்டாம். எல்லோரும் என்றென்றும் மகிழ்ச்சியுடனே இருங்கள்.

ஏனென்றால் சோகம் எனக்கு மட்டுமே பிடிக்கும்.