Tuesday, April 15, 2008

நானும் என் தனிமையும்

நானும் என் தனிமையும் எப்பொழுதும் பேசிக் கொள்வது ஒரே விஷயமாகத் தான் இருக்கும். என் வாழ்வில் தனிமை நிறைய இடத்தைப் பெற்று இருக்கிறது. தனிமையின் தவிப்பு, நினைப்பு, சிரிப்பு,அழுகை என் நான் எவ்வளவோ அனுபவித்திருந்தாலும் தவிப்பும் , அழுகையும் மட்டுமே பெரும் பங்கு வகிக்கும். தனிமையில் இருக்க பெரும்பாலானோர் விரும்புவதில்லை என்றாலும் நான் நினைத்தால் கூட என் தனிமையை என்னால் தவிர்க்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். படித்து முடித்த கையுடன் என்னை வந்து ஆக்கிரமித்த தனிமை திருமணம் ஆன பிறகு விலகி ஓடி விடும் என்றே நினைத்திருந்தேன். திருமணம் ஆனாலும் நான் உன்னை விட மாட்டேன் என்று என் வேலை மூலமாக தனிமை என்னைத் தழுவிக் கொண்டு இருந்தது. தனிமையில் நாம் நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும், நடக்கப் போகும் நிகழ்வுகளை கற்பனை செய்வதிலும் தன் பொழுதைக் கழிக்க வேண்டி வரும். ந்டந்தவைகளில் நல்ல விஷயங்கள் மிகவும் குறைவாகவே நிழற்படமாக ஓடும். கசப்பான விஷயங்கள் மீண்டும் மீண்டும் வந்து கடல் அலைகளாய் மனதில் மோதி விட்டுச் செல்லும்அப்படி மனச் சுவற்றில் மோதும் அலைள் பெளர்ணமி இரவு அலைகளைச் சேர்ந்த ரகமாய் இருந்தால் தவிப்பு உண்டாகும். ஆனால் அதே சமயம் அந்த அலைகள் சுனாமியாய் மாறி மோதும் போது அழுகை வெடித்துக் கிளம்பும். அதன் பிறகு நாம் நமது எதிர்காலத்தில் நிகழப்போவதாக கற்பனை காண எங்கே மனம் லயிக்கும். மீண்டும் மீண்டும் தனிமையில் தவிப்பையும், அழுகையையும் பெளர்ணமி இரவு அலைகளும், சுனாமி அலைகளும் தந்து கொண்டே இருக்கும். அந்த நேரம் நாம் சாய்ந்து கொள்ள ஒரு தோள் அல்லது தலை வைத்துப் படுக்க ஒரு மடி கிடைக்காதா என்று ஏங்கும் அனுபவம் இருக்கிறதே, அப்பப்பா. நானும் என் தனிமையும் எப்பொழுதும் பேசிக் கொள்வது இந்த ஒரே விஷயமாகத் தான் இருக்கும்.

ஒரு டுவிஸ்ட்

கோவாவின் பனாஜி பஸ் நிலையம். பனாஜியில் இருந்து மட்கான் போவதற்காக பயணிகள் டிக்கெட் கவுண்ட்டரில் க்யூவில் நின்று கொண்டு இருக்கின்றனர்.க்யூ மிகவும் நீளமானதாக வளைந்து நெளிந்து இருந்தது.பயணிகள் வெகு நேரம் பஸ் வராததால் பொறுமையிழந்து கொண்டு இருந்தனர்.சில பயணிகள் கவுண்ட்டரில் போய் விசாரித்து விட்டு வந்தனர். அந்த நேரம் ஒரு கல்லூரி மாண்வனைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் நிதானமாக நடந்து வந்து நீளமான க்யூவைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தான். அதே சமயம் தூரத்தில் பஸ் வருவது தெரிந்ததும் பாதி க்யூவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெரியவரின் முன்பாக போய் இடித்துக் கொண்டு அந்த இளைஞன் நின்று கொண்டான். பெரியவர் அவன் தோளைத் தட்டி தம்பி க்யூவில் பின்னால் போய் நின்று கொண்டு எல்லோரையும் போல டிக்கெட் எடுத்து பஸ்ஸில் ஏறு என்றார். அவன் அந்தப் பெரியவர் வேறு யாரிடமோ சொல்வது போல கேட்டும் கேட்காதது மாதிரி நின்று கொண்டு இருந்தான். மீண்டும் பெரியவர் அவனுடைய தோள்பட்டையைத் தட்டி நான் சொல்வது உன் காதில் விழவில்லையா நான் உன்னிடம் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். பின்னால் போய் நில் என்றார். அதற்கு அந்த வாலிபன், பெருசு, நான் இங்க நின்னா உனக்கு என்ன, குடியா முழுகிடும். எனக்கு அவசரமா போகணும். இந்த பஸ்ஸில நீயும் கண்டிப்பா ஏறாலாம். கொஞ்ச நேரம் பேசாம இரு என்று சொல்லி விட்டு பெரியவரையே முறைத்தான். பெரியவருக்கு சுரீர் என்று கோபம் வந்தது அவர் முகத்தில் தெரிந்தது. பெரியவர் அந்த இளைஞன் கையைப் பிடித்து இழுத்து அவனை க்யூவிற்கு வெளியில் தள்ளினார். இதை சற்றும் எதிர்பாராத இளைஞன் கோபம் தலைக்கேற தன் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை உருவ ஆரம்பித்தான். இதையனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்த பயணிகள் அடுத்து என்ன நடக்கப் போகுமோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த இளைஞன் பெல்ட்டை ஓங்கி பெரியவரின் மீது ஒரு விளாசு விளாச பெரியவர் அந்த பெல்ட்டை தன் வலது கையால் இறுகப் பற்றி தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அவனிடமிருந்து பிடுங்கி விட்டார். அந்த இளைஞன் இதை சற்றும் எதிர்பாராததால் பெரியவரை அடிக்க கையை ஓங்கிய வேளையில் பெரியவரின் கையில் இருந்த பெல்ட் அவனுடைய உடம்பில் விளையட ஆரம்பித்தது. அந்த இளைஞனை கதறக் கதற ஏழெட்டு அடிகள் அடித்து விட்டு அவனை கீழே தள்ளி விடவும் போலீஸ் அங்கு வரவும் சரியாக இருந்தது. நடந்த விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்ட போலீஸார் அந்த இளஞனை நெட்டித் தள்ளிக் கொண்டு போனார்கள். க்யூவில் இருந்தவர்கள் அனைவரும் பெரியவரைப் பார்த்து அவனுக்கு நன்றாக பாடம் புகட்டீனீர்கள் என்று பாராட்டினர். இதிலிருந்து அறியப்படுவது என்னவென்றால் நாம் நமக்கு உதவும் என்று இடுப்பில் கட்டிக் கொள்ளும் பெல்ட் நமக்கே வினையாய் வந்து முடியலாம் என்பதே.