Tuesday, April 1, 2008

பிச்சை

நான் மும்பையில் வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுது என் ஆபீஸுக்கு எதிர்புறம் உள்ள கடையில் தினமும் காலையில் பிச்சைகாரர்கள் வந்து காசு கேட்டு வாங்கிச் செல்வது வழக்கம். அந்தக் கடை முதலாளியும் ரெகுலராக வரும் நான்கைந்து பிச்சைக்காரர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் இருபத்தைந்து பைசா அல்லது ஐம்பது பைசா என்று கொடுத்து வந்தார்.
ஒரு நாள் பேப்பர் படித்துக் கொண்டிருந்த அந்த முதலாளியிடம் ஒரு பிச்சைகாரன் வந்து பிச்சை கேட்க பேப்பரை மடித்து வைத்த முதலாளி காட்டுக்கத்தலாக கத்த ஆரம்பித்து விட்டார். அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து. கடை வாசல்படியை விட்டு கீழே இறங்கு இனிமேல் என் கடைப் பக்கம் வந்தால் காலை வெட்டி விடுவேன் திரும்பிப்பார்க்காமல் ஓடி விடு என்று கூச்சலிட்டார்.
நான் அவரிடம் போய் இன்று உங்களுக்கு என்ன ஆயிற்று ஏன் இந்தக் கோபம் என்று கேட்டேன். அதற்கு அவர் பேப்பரைக் காண்பித்து படியுங்கள் இதை என்றார். பேப்பரில் ஒரு இறந்து போன பிச்சைக்காரனின் குடிசையில் இருந்து 4லட்சரூபாய் நோட்டாகவும் ஒரு சிறிய சாக்குப்பை நிறைய சில்லறைகளும் இருந்ததாக செய்தி தெரிவித்தது.
அந்த முதலாளி நான் போடும் பிச்சையை சேர்த்து வைத்து அந்தப் பிச்சைக்காரன் லட்சாதிபதியாகி விட்டான். வரும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டு நான் பிச்சைக்காரன் ஆகி விடுவேன் போல் தெரிகிறது என்றார். இதில் பிச்சை போட்ட முதலாளியை நினைத்து நொந்து கொள்வதா? அல்லது பிச்சை எடுத்து சேமித்து வைத்த பிச்சைக்காரனை பாராட்டுவதா என்று தெரியவில்லை.
ஆனால் இந்த இருவருக்கும் ஒரு விஷயம் மட்டும் ஒத்துப் போகிறது. இருவரும் வியாபாரிகள் என்பது தான் அது. என்ன முதலாளி முதல் போட்டு வியாபாரம் செய்து சம்பாதிக்கிறார். பிச்சைக்காரன் முதல் போடாமல் வியாபாரம் செய்து சம்பாதிக்கிறான்.