Thursday, September 4, 2008

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் ரிஸப்ஷனில் ஒரே மாதிரி

சேலை உடுத்தி , முகத்தில் செயற்கை புன்னகையுடன் , ஒரே வயது

உள்ள அழகு பெண்கள் நான்கைந்து பேர் சப்தம் வராமல் வாயை

மட்டும் அசைத்து ஜல்லியடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த

கணேஷும் வஸந்த்தும் விழா நடக்க இருக்கும் ஹாலுக்கு போகும்

பாதையை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு நகர்ந்தனர். நடந்து

கொண்டே , வஸந்த் கணேஷிடம் " பாஸ் ரைட்டுல இருந்து

ரெண்டாவதாக ஒரு பொண்ணு நின்னுக்கிட்டு இருந்துச்சே , செம

கட்டை பாஸ். சும்மா நின்னு விளையாடும் போல தெரியுது"

என்றான். அதற்கு கணேஷ் , "உன் வேலையைகாட்டஆரம்பிச்சிட்டியா,

பேசாம வா "என்று சொல்லி ஹாலுக்குள் நுழைந்து முதல்

வரிசையில் லெஃப்ட் ஸைடில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்து

கொண்டனர்.


சிறிது நேரம் கழித்து அதே ரிஸப்ஷனில் பரத்தும் ,சுசீலாவும்

வந்து விழா நடக்கும் ஹாலுக்கு போக வழி கேட்டனர். பரத் அந்த

ரிஸப்ஷனிஸ்ட்களை ஜல்லிக்கட்டு காளையின் பெருமூச்சுடன்

பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த சுசீலா கையில் இருந்த

கர்சீப்பை பரத்திடம் நீட்டி " வழியுது துடைச்சிக்கங்க " என்று சொல்லி

அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.


பின்னாலேயே இன்ஸ்பெக்டர் கோகுல் நாத்துடன்

விவேக்கும் , ரூபலாவும் உள்ளே நுழைந்தனர். கோகுல் நாத் இந்த

ஓட்டலின் விழா நடக்கும் ஹாலில் ஏற்கனவே சில விழாக்களுக்கு

வந்து சென்றிருப்பதால் நேராக ஹால் இருக்கும் திசையை நோக்கி

நடந்தார். ரூபல ரிஸப்ஷனில் நிற்கும் பெண்களின் நகை, மற்றும்

உடை அலங்காரத்தை கவனித்துக் கொண்டே வருவதை விவேக் தன்

ஓரக் கண்ணால் கவனித்தான்.

சில நிமிடங்களுக்கு பிறகு நீல நிற ஜீன்ஸ் மற்றும்

வெளிர் நீல நிற டி-ஷர்ட்டும் அணிந்த நரேந்திரனும் , உடம்பை

சிக்கென்று கவ்விய புடவையுடன் வைஜெயந்தியும் உள்ளே

நுழைந்தனர். நரேந்திரன் நேராக ரிஸப்ஷனுக்கு சென்று ஹால் எந்த

மாடியில் இருக்கிறது என்று கேட்க அதில் ஒரு ரிஸப்ஷனி

எய்த் ஃப்ளோர் என்றாள். அதற்கு நரேந்திரன் அவளிடம் " நாங்க இந்த

ஓட்டலுக்கு புதுசு. ப்ளீஸ் , நீங்க கூட வந்து கொஞ்சம் காமிங்களேன் "

என்றான். வைஜெயந்தி தனது முழங்கையால் அவன் விலாவில்

ஓங்கி ஒரு இடி இடித்து விட்டு , ரிஸப்ஷனிஸ்டை பார்த்து

" நோ தாங்க்ஸ். நாங்களே போயிருவோம் " என்று நரேந்திரனை

நெட்டித் தள்ளிக் கொண்டு வந்து " நீ அவகிட்ட வழிந்த வழிசலுக்கு ,

உனக்கு ஒரு வாரத்திற்கு ஒண்ணும் கிடையாது." என்றாள்.

அனைவரும் விழா நடக்கும் ஹாலில் முன்

வரிசையில் அமர்ந்திருந்தனர். விழாவின் நாயகனான ஈகிள்ஸ் ஐ

துப்பறியும் நிறுவனத்தின் தாஸுக்கு லைஃப் டைம் அச்சீவ்மெண்ட்

அவார்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கார் ரிப்பேராகி டாக்ஸி

கிடைக்காமல் லேட்டாக வந்து சேர்ந்த எழுத்தாளர் ராஜேந்திர குமார்

உட்கார காலி இருக்கை இல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்து

" ஞே " என்று விழித்துக் கொண்டிருந்தார்.

பின் குறிப்பு : எனது இளம் பிராயத்தில் நான் படித்து ரசித்த

எழுத்தாளர்களை இதன் மூலமாக நினைவு கூர்ந்திருக்கிறேன். அந்த

எழுத்தாளர்கள் முதல் பாராவிலிருந்து முறையே

சுஜாதா , பட்டுக்கோட்டை பிரபாகர் , ராஜேஷ்குமார் , சுபா மற்றும்

ராஜேந்திர குமார் ஆகியோர் தான் என்று சொல்லவும் வேண்டுமோ.

No comments: