Tuesday, December 30, 2008

விளம்பர வில்லன்கள்

இன்றைய உலகில் மண்ணை விற்க வேண்டுமானாலும் சரி , பொன்னை விற்க வேண்டுமானாலும் சரி. விளம்பரம் என்பது மிக மிக அவசியமாகப் போய் விட்டது. அப்படி வரும் விளம்பரங்களில் சம்பந்தமே இல்லாமல் பெண்களை காட்டுவதும் அளவிற்கு அதிகமாக பொருளின் தரத்தையும் , கம்பெனியின் உழைப்பையும் உயர்த்திக் காட்டுவதும் வழக்கமாகி விட்டது. மக்களை திசை திருப்பவும் , ஏமாற்றவும் பல உத்திகளை கையாள்கின்றனர். உதாரணத்திற்கு நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் இதோ சில.

{1} மனிதனின் தோல் நிறத்தை நிரந்தரமாக மாற்ற முடியாது என்று தெரிந்தும் கருப்பை சிவப்பாக்குகிறோம் என்று க்ரீம்களும் , லோஷன்களும் விற்கப்படுகின்றன. இதில் சில கம்பெனிகள் கியாரண்டி வேறு கொடுக்கின்றன.

{2} சில கம்பெனிகள் தங்களது பொருட்களில் ஒன்றை வாங்கினால் ஒன்று இலவசம் என்கின்றன.அப்படி ஒன்றுக்கு ஒன்று இலவசமாக விற்கும் பொருட்களில் தரம் இருப்பதில்லை , அல்லது விலை அதிகமாக இருக்கின்றது.

{3} சில கம்பெனிகள் தங்களது பொருட்களை முன்பை விட" அதிக சக்தியுடன் "என்று சொல்லி விளம்பரம் செய்கின்றன.முன்பைவிட தற்சமயம் அதிக சக்தி என்றால் அதற்கு முன்பு சக்தி குறைந்த , தரம் குறைந்த பொருட்களை விற்று வந்ததாகத் தானே அர்த்தம்.

{4} ஒரு கம்பெனி தனது வாஷிங் பவுடரில் உப்பு நீரை நல்ல தண்ணீராக மாற்றக் கூடிய சக்தி இருக்கிறது என்று விளம்பரம் செய்கிறது. ஒரு அரசாங்கம் கடல் நீரை குடி நீராக மாற்ற கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கிறது. இங்கே சில்லறையை விட்டெறிந்தால் உப்பு தண்ணீர் நல்ல தண்ணீராக மாறி விடும் போல் தெரிகிறது.

{5} சில கம்பெனிகள் அவர்களது வாசனை பொருட்களை தடவிக் கொண்டால் வேலை கிடைக்கும் , பெண்கள் பின்னால் ஓடி வருவார்கள் , ப்ரமோஷன் கிடைக்கும் என்பது போல விளம்பரங்களை சித்தரித்து ஏமாற்றுகின்றனர்.

இப்படி பொருட்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக விளம்பரத்தில் பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்களையும் , விளையாட்டு வீரர்களையும் இதில் ஈடுபடுத்துவது கொடுமையின் சிகரமாகும்.

இப்படிப்பட்ட விளம்பர வில்லன்களிடம் ஏமாந்து போகாமல் ஜாக்கிரதையாக இருங்கள். இல்லையென்றால் நீங்கள் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை இந்த விளம்பர வில்லன்கள் கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவார்கள். உஷார்..................உஷார்........

No comments: